புதுச்சேரியைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி சச்சின் மணி, அங்குள்ள கால்சென்டரில் வேலை செய்யும் நந்திதா ஸ்வேதா இருவரும் காதலர்கள். வேலைக்குச் சென்று, கைநிறைய சம்பாதிப்பவனுக்குத்தான் தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று அடம்பிடிக்கிறார், நந்திதாவின் தந்தை சித்ரா லட்சுமணன். இதனால், தீவிரமாக வேலை தேடி அலைகிறார் சச்சின். ஆனால், அவருக்கு நல்ல வேலை கிடைத்த நிலையில், திடீரென்று நந்திதாவை வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார், தந்தை. திருமணத்தன்று நந்திதாவை அழைத்துச் செல்ல வருகிறார், சச்சின். வந்த இடத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுகிறார். காரணம், ரயில் பெட்டியில் தன் பெயரையும், நந்திதா பெயரையும் அவர் கிறுக்கி வைத்ததுதான்.
கைதாகி அடைத்து வைக்கப்பட்ட அந்த அறையில், ரயில்வே டிராக்கில் சிறுநீர் கழித்த அப்புக்குட்டி, கம்பி என நினைத்து அபாயச்சங்கிலியைப் பிடித்துக்கொண்டு வந்த மயில்சாமி, தனது கிளினிக்கைப் பற்றி விளம்பரம் செய்த டாக்டர் மனோபாலா, சசிகுமார் படத்தின் போஸ்டர்களை ஒட்டிய அவரது தீவிர ரசிகர் அருண்ராஜா காமராஜ், டிக்கெட் இன்றி பயணித்த சென்ராயன், தண்டவாளத்தை திருடி விற்கும் ஆரோன் பிரபாகர் உள்பட பலர் இருக்கிறார்கள். அவர்களைக் கோர்ட்டில் ஆஜர்படுத்தினால், நீதிமன்றம் 300 ரூபாய் வரை அபராதம் விதிக்கும். பிறகு விடுதலை செய்து விடும். இது வழக்கமான நடைமுறை. ஆனால், சச்சின் உடனே புதுச்சேரி சென்று நந்திதாவை மீட்க வேண்டும்.
அவரது காதல் கதையைக் கேட்கும் அனைவரும், அவருக்கு எப்படியாவது உதவி செய்தாக வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அது எப்படி என்பதை, காமெடி கலாட்டாவாகச் சொல்லியிருக்கிறார்கள். வழக்கமான காதல் கதையை, புது கதைக்களத்தில் பயணிக்க வைத்திருப்பதால், கவனம்ஈர்க்க முயற்சித்து இருக்கின்றனர். பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றத்தில், வெகுஇயல்பாக நடித்து இருக்கிறார் சச்சின். காமெடி காட்சி
களில் ஆங்காங்கே தடுமாறினாலும், ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறார். கோடீஸ்வரரான தனது தந்தையின் பணத்தில் வாழக்கூடாது என்று, மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்கிறார் நந்திதா.
ஆனால், வேலையில்லாத ஒருவரைக் காதலிக்கிறார். இது என்ன லாஜிக் என்று தெரியவில்லை. நந்திதா அழகுதான். ஆனால், இதில் அவர் ஓவர் மேக்கப்பில் வருகிறார். மயில்சாமி, சென்ராயன், அப்புக்குட்டி, சூப்பர்குட் லட்சுமணன் போன்றோர் வளவளஎன்று பேசி, சில நேரங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். அருள்தாஸ் முகத்தில் வில்லத்தனம் தெரிவதால், காமெடி ஒர்க்கவுட் ஆகவில்லை. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு, பளிச். பாடல் காட்சிகளில் நன்கு உழைத்து இருக்கிறார். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. சாதாரண டிராபிக் கான்ஸ்டபிள் களுக்கு இருக்கக்கூடிய மரியாதை, ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தோருக்குக் கிடைப்பதில்லை.
எனவே அவர்கள், தங்கள் எல்லைக்குஉட்பட்ட பகுதிகளில் நடக்கும் சின்னச்சின்ன தவறுகளில் கூட அதிக சீற்றம் காட்டுகிறார்கள் என்கிற ‘நாட்’டில் கதையைத் தொடங்கும்போது, அட... ரொம்பவும் புதிதாக இருக்கிறதே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அதில் வழக்கமான காதல் மற்றும் நண்பர்கள் கலாட்டாவிற்குள் சென்று, பழைய பார்முலாவிலேயே சுற்றி வருகிறது படம். புதுச்சேரியில் நடக்கும் காதல் கதைக்கு கத்தரி போட்டு, தாம்பரம் ரயில் நிலையத்துக்குள்ளேயே முழு கதையும் நடந்திருந்தால், புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்து, ரசிகர்களையும் தியேட்டர்களுக்கு முன்னால் காத்திருக்க வைத்திருக்கலாம்.
No comments:
Post a Comment